சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.026   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிடி எலாம் பின் செல,
பண் - கொல்லி   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளையீசுவரர் மகமாயியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=D7O7s5znQTg
7.084   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,
பண் - புறநீர்மை   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளைநாதேசுவரர் பொற்கொடியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ceuz_bdSEns

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.026   பிடி எலாம் பின் செல,  
பண் - கொல்லி   (திருத்தலம் திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) ; (திருத்தலம் அருள்தரு மகமாயியம்மை உடனுறை அருள்மிகு காளையீசுவரர் திருவடிகள் போற்றி )
பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?

[1]
நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப்
பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான்,
கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

[2]
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்
காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை,
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீா
தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.

[3]
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.

[4]
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.

[5]
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீா
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்-
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.

[6]
மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.

[7]
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.

[8]
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே

[9]
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.

[10]
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-
நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.084   தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) ; (திருத்தலம் அருள்தரு பொற்கொடியம்மை உடனுறை அருள்மிகு காளைநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், சூது அன மென்முலையாள் பாகமும்,   ஆகி வரும்
புண்டரிகப் பரிசு ஆம் மேனியும்; வானவர்கள் பூசல் இடக் கடல் நஞ்சு உண்ட கருத்து   அமரும்,
கொண்டல் எனத் திகழும், கண்டமும்; எண்தோளும்; கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்;   கண்குளிரக்
கண்டு, தொழப்பெறுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[1]
கூதல் இடும் சடையும், கோள் அரவும், விரவும் கொக்கு இறகும், குளிர் மா மத்தமும், ஒத்து   உன தாள்
ஓதல் உணர்ந்து, அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா, விரசும் ஓசையைப்  பாடலும், நீ
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு,  என் கணது அல்லல் கெட,
காதல் உற, தொழுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[2]
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை, நல் பதம் என்று உணர்வார் சொல்பதம் ஆர் சிவனை,
தேன் இடை இன்னமுதை, பற்று அதனில்-தெளிவை, தேவர்கள் நாயகனை, பூ உயர்  சென்னியனை,
வான் இடை மாமதியை, மாசு அறு சோதியனை, மாருதமும்(ம்) அனலும் மண் தலமும்(ம்)   ஆய-
கான் இடை மாநடன் என்று எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை    காளையையே .

[3]
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலைத் தொழில் ஆர் சேவகம்; முன் நினைவார்    பாவகமும்; நெறியும்;
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசைப் பரிசும்; கோசிகமும்(ம்),-அரையில்,-   கோவணமும்(ம்) அதளும்;
மல்-திகழ் திண்புயமும்; மார்பு இடை, நீறு துதை, மாமலைமங்கை உமை சேர் சுவடும்; புகழக்
கற்றனவும் பரவிக் கைதொழல் என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[4]
கொல்லை விடைக் குழகும், கோல நறுஞ்சடையில் கொத்து அலரும்(ம்) இதழித் தொத்தும், அதன் அருகே
முல்லை படைத்த நகை மெல்லியலால் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய்   எப்பரிசும்,
தில்லைநகர்ப் பொது உற்று ஆடிய சீர் நடமும், திண்ழுவும், கைமிசைக் கூர் எரியும்(ம்)   அடியார்
கல்லவடப் பரிசும், காணுவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[5]
பண்ணு தலைப் பயன் ஆர் பாடலும், நீடுதலும்,- பங்கயமாது அனையார்,-பத்தியும்; முத்தி   அளித்து
எண்ணு தலைப்பெருமான் என்று எழுவார் அவர் தம் ஏசறவும்(ம்); இறை ஆம்  எந்தையையும் விரவி
நண்ணுதலைப் படும் ஆறு எங்ஙனம்? என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்ணுதலை, கனியை, காண்பதும்; என்றுகொலோ? கார் வயல் சூழ் கானப்பேர் உறை    காளையையே .

[6]
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை, வஞ்சர் மனத்து இறையும்  நெஞ்சு அணுகாதவனை,
மூவர் உருத் தனது ஆம் மூல முதல் கருவை, மூசிடும் மால்விடையின் பாகனை, ஆகம் உறப்
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை, பால் நறுநெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை,-
காவல் எனக்கு இறை என்று, எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[7]
தொண்டர் தமக்கு எளிய சோதியை, வேதியனை, தூய மறைப் பொருள் ஆம் நீதியை,  வார்கடல் நஞ்சு
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை, ஊழி படைத்தவனோடு ஒள் அரியும்(ம்)   உணரா
அண்டனை, அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை, மேதகு சீர் ஓதியை,  வானவர் தம்
கண்டனை,-அன்பொடு சென்று எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கனப்பேர் உறை காளையையே .

[8]
நாதனை, நாதம் மிகுந்த ஓசை அது ஆனவனை, ஞானவிளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை,   பயிரை,
மாதனை, மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை, குற்றம் இல்    கொள்கையனை,
தூதனை, என்தனை ஆள் தோழனை, நாயகனை, தாழ் மகரக்குழையும் தோடும் அணிந்த   திருக்-
காதனை,-நாய் அடியேன் எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[9]
கன்னலை, இன்னமுதை, கார் வயல் சூழ் கானப் பேர் உறை காளையை, ஒண் சீர் உறை தண் தமிழால்
உன்னி மனத்து அயரா, உள் உருகி, பரவும் ஒண் பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்,
பன்னும் இசைக்கிளவி பத்து இவை பாட வல்லார், பத்தர் குணத்தினராய், எத்திசையும்   புகழ,
மன்னி இருப்பவர்கள், வானின்; இழிந்திடினும், மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே! .

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list